முருகதாசை கைது செய்ய தடை : சென்சார் அனுமதி பெற்று வெளியிடப்பட்ட சர்கார் படத்தை எதிர்ப்பது ஏன்? நீதிபதி கேள்வி

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை நவம்பர் 27-ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சர்கார் பட பிரச்சினை தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தணிக்கை சான்று தந்த பின் ஒரு படத்தில் காட்சிகளை ஆளுங்கட்சியினர் நீக்க சொல்வது சட்டவிரோதம் என்றும், சர்கார் படத்தினை பார்த்து பொதுமக்களோ, அரசுக்கு எதிரான போராளிகளோ போராடவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார் இயக்குநர் முருகதாஸ்.

மேலும் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் எண்ணத்தில் சர்காரை உருவாக்கவில்லை என்றும் முன் ஜாமீன் மனுவில் முருகதாஸ் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை நவம்பர் 27-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி?

சர்கார் பட போஸ்டர்களை கிழித்தவர்களில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதி இளந்திரையன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளது என்றும், சென்சார் அனுமதி பெற்று வெளியிடப்பட்ட சர்கார் படத்தை எதிர்ப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார் நீதிபதி இளந்திரையன். சர்கார் படக் காட்சிகளில் என்ன விதிமீறல் உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: