* நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் அதிர்ச்சி * பலாத்காரமா என போலீஸ் விசாரணை
சென்னை: எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தியதுடன், அவரை கொன்று கடற்கரையில் புதைத்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று அதிகாலையில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள நீச்சல் குளம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் மேடாக இருந்த பகுதியை சுற்றி ஏராளமான நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தன. இதை பார்த்ததும் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதிக்கு சென்று நாய்களை விரட்டிவிட்டு பார்த்தபோது மணலில் ஒரு பெண் உடல் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், நிர்வாணமாக புதைக்கப்பட்டிருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு மணலில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர். கொல்லப்பட்ட பெண்ணுக்கு 35 வயது இருக்கும். உடல் அருகே புடவை மற்றும் தாலி கயிறு, செருப்பு ஆகியவை மணலில் புதைந்து கிடந்தது. அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.