சபரிமலை மண்டல, மகரவிளக்கு கால பூஜைக்கு செய்ய வேண்டிய வசதிகள் கேரள அரசு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தென்மாநில அமைச்சர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும்  பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று  திருவனந்தபுரத்தில் நடந்தது. இதை தென்மாநிலங்களின் அமைச்சர்கள்  புறக்கணித்தனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட  மண்டல கால பூஜைகள் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது.இதையொட்டி  பக்தர்களுக்கு  ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா,  கர்நாடகா மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்கள் மற்றும்  அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் எந்த மாநில அமைச்சரும் பங்கேற்கவில்லை. மாநிலங்களின் அறநிலையத்துறை  அதிகாரிகள் மட்டுமே கலந்து ெகாண்டனர். இதுகுறித்து அறிந்த முதல்வர் பினராய்  விஜயனும் கூட்டத்திற்கு வரவில்லை. இதையடுத்து ஆலோசனை கூட்டத்தை கேரள  தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் தமிழக சுற்றுலா, கலாச்சார மற்றும் அறநிலையத்துறை  கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா, கர்நாடக வருவாய்துறை  முதன்மை செயலாளர் கங்காரம் பகரியா, புதுச்சேரி அறநிலையத்துறை  ஆணையாளர் தில்லைவேல், தெலங்கானா அறநிலையத்துறை இணை ஆணையாளர்  கிருஷ்ணவேணி, ஆந்திர அறநிலையத்துறை அதிகாரி சுப்பராவ் ஆகியோர்  கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அபூர்வ வர்மா பேசுகையில், ‘‘சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  தமிழக பக்தர்களில் 90 சதவீதம் பேர் பெருவழிப்பாதையை  பயன்படுத்துகின்றனர். அவ்வழியில் போதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும்’’ என்றார். கூட்டத்தில்,  கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசுகையில், ‘‘அனைத்து வயது இளம்பெண்களையும் அனுமதிக்க  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த கேரளாவுக்கு  தென்மாநில அரசுகள் உதவ வேண்டும்’’ என்றார்.

பக்தர்களுக்கு பார்கோடு கூப்பன்

மண்டல கால பூஜையின்போது சன்னிதானத்தில் பக்தர்கள் 24 மணி ேநரத்துக்கும் மேல் தங்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் ஒரு நாளுக்கு மேல் தங்குகிறார்களா என்பதை கண்டுபிடிக்க கேரள போலீஸ் புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதன்படி சபரிமலை வரும் பக்தர்களுக்கு பார்கோடு உள்ள கூப்பன் விநியோகிக்கப்படும். கூப்பன் வழங்கும்போது அதில், தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். 24 மணி நேரத்துக்கு மேல் யாராவது தங்குவதாக சந்தேகம் வந்தால் உடனடியாக கூப்பனை வாங்கி போலீசார் பரிசோதிப்பார்கள். இதற்கிடையே, சபரிமலையில் ஆன்லைன் தரிசன முன்பதிவு வசதி நேற்று முன்தினம் தொடங்கியது. கேரள போலீசின் sabarimalaq.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: