தர்மபுரி அருகே பரபரப்பு லாரி, கார் உட்பட 4 வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது: போக்குவரத்து பாதிப்பு

தர்மபுரி: தர்மபுரி தொப்பூர் கணவாயில் நேற்று அதிகாலை 2 லாரி, 2 கார் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ₹1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. கோவையில் இருந்து நேற்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று ஐதராபாத்திற்கு தேங்காய் எண்ணெய் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. லாரியை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டியூரை சேர்ந்த சங்கரன்(30) ஓட்டினார். மாற்று டிரைவராக கம்மம்பட்டியை சேர்ந்த விஜயகுமாரும்(28) உடன் சென்றார். அதிகாலை 3.30 மணியளவில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி மேட்டில் உள்ள எஸ் வளைவில் லாரி ஏற முயன்றபோது, திடீரென லாரியின் இன்ஜினில் இருந்து புகை கிளம்பியது. இதைப்பார்த்த டிரைவர்கள் இருவரும் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்த்தனர். அதற்குள் இன்ஜினில் தீப்பற்றிக்கொண்டது. தீயை அணைக்க முயல்வதற்குள், மளமளவென லாரி முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது.

அந்த நேரத்தில், லாரிக்கு பின்னால் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு, 6 பேருடன் சென்ற கார் வந்தது. அந்த காரை திருச்சி உறையூரை சேர்ந்த ரமேஷ் (32)ஓட்டி வந்தார். முன்னால் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால், காரை சாலை ஓரமாக நிறுத்தினார். இந்த காருக்கு பின்னால், வந்த பெங்களூருவை சேர்ந்த நாராயணசாமி என்பவரும் தனது காரை நிறுத்தினார். அப்போது, எரிந்து கொண்டிருந்த லாரியின் டயர்கள் திடீரென வெடித்து, லாரி பின்னோக்கி நகர்ந்தது. இதை பார்த்து அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களில் இருந்தவர்கள் வேகமாக, கார்களை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். பின்னோக்கி வந்த லாரி, அந்த 2 கார்கள் மீதும் மோதியதில், கார்களும் தீப்பிடித்து எரியத்தொடங்கின. அப்போது, அந்த வழியாக நாமக்கல்லில் இருந்து பெங்களூருவுக்கு காஸ் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி, முன்னால் எரிந்து கொண்டிருந்த கார்கள் மீது மோதியது. இதில் அந்த லாரியும் தீப்பிடித்து எரிந்தது.

இரண்டு லாரிகள் மற்றும் 2 கார்கள் கொழுந்து விட்டு எரிந்ததால், அந்த பகுதியே தீப்பிழம்பாக காட்சியளித்தது. இதனையடுத்து, அவ்வழியில் போக்குவரத்து முடங்கியது. தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் ஹைவே போலீசார் அளித்த தகவலின்பேரில் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 4 வாகனங்களும் முற்றிலும் எரிந்துவிட்டன. சேத மதிப்பு ₹1 கோடி என கூறப்படுகிறது. இந்த விபத்தால், தொப்பூர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் நின்றன. ஒரு மணி நேரத்திற்கு பிறகு, காலை 6 மணியளவில், போக்குவரத்து சீரானது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: