பாம்பன் பாலத்தில் விரைவில் மின்சார ரயில் : ரயில்வே போர்டு உறுப்பினர் ஆய்வு

ராமேஸ்வரம்: மதுரை-ராமேஸ்வரம்  இடையிலான மின்சார ரயில் பாதை திட்டத்திற்காக பாம்பன் ரயில்  பாலத்தில் மின்பாதை அமைப்பது குறித்து ரயில்வே போர்டு உறுப்பினர்  கான்ஷியாம்சிங் நேற்று ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பன் ரயில் பாலத்தில்  கப்பல் செல்லும்போது திறந்து வழிவிடும் ஷெர்ஜர் தூக்குப் பாலத்தை பல கோடி  ரூபாய் செலவில் மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து  வருகிறது. இந்நிலையில், மதுரை - ராமேஸ்வரம் இடையிலான அகல ரயில்பாதையை மின்மயமாக்குவது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் வந்த ரயில்வே போர்டு உறுப்பினர்  கான்ஷியாம்சிங் (இழுவை பிரிவு) பாம்பன் ரயில் பாலத்தில் மின்சார ரயில்கள்  இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தார். தற்போது அகல ரயில்பாதையாக இருக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் மின்சார ரயில் பாதை  அமைப்பதற்கு ஏற்ற வகையில் பாலத்தின் உயரம் மற்றும் அகலம் குறித்து நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதையை ரூ.12 ஆயிரம் கோடி  செலவில் மின்சார ரயில் பாதையாக மாற்றுவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம்  மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சூரியஒளி, காற்றாலை  போன்ற மரபுசாரா எரிசக்தி மின்சாரம் மூலம் ரயில்களை இயக்குவதன் மூலம்  ஆண்டுக்கு ரூ.13,500 கோடிக்கு எரிபொருள் செலவு  மிச்சமாகும். மதுரை - ராமேஸ்வரம் இடையே உள்ள அகல ரயில் பாதையை ரூ.158  கோடி செலவில் மின்சார ரயில் பாதையாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாம்பன்  பாலத்தின் உயரம் குறைவாக உள்ளது. இதனால் பாம்பன் கடலில் புதிய பாலம்  கட்டுவதற்கான திட்டம் உள்ளது. இதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதால்  தற்போதுள்ள பாலத்தில் மின்சார ரயில் பாதை அமைக்கும் வாய்ப்புகள் குறித்து  தொழில்நுட்ப பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் இத்திட்டம்  செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, ரயில்வே துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: