டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருக்கையில் பதுக்கி வைத்த ரூ2 கோடி தங்கம் சிக்கியது: கேமராவில் சிக்கிய மர்மநபர்களுக்கு வலை

சென்னை: டெல்லியில் இருந்து ஏர் இந்தியா உள்நாட்டு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. இந்த விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், 6 பேர் கொண்ட குழுவினர் இரவு 11 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள், சிறப்பு அனுமதி பெற்று விமானத்தில் ஏறி சோதனை நடத்த தயாராக இருந்தனர். மேற்கண்ட விமானம் சென்னையில் தரை இறங்கியதும், அதில் பயணம் செய்த 138 பயணிகளும் வெளியில் வந்தனர். அவர்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அவர்கள் யாரிடமும் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இல்லை.

இதையடுத்து, அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி சோதனையிட்டனர். அப்போது கழிப்பறை உள்பட அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் சிக்கவில்லை. பின்னர் பயணிகள் அமரும் இருக்கைகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். அப்போது, 2 இருக்கைகளின் குஷனுக்கு அடியில் பிரவுன் கலரில் 2 பார்சல்கள் இருந்தது தெரிந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது ஆறரை கிலோ கொண்ட 6 தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ2 கோடி. அதை கைப்பற்றிய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். அதில், விமானம் ஏற்கனவே துபாயில் இருந்து சென்னைக்கு காலையில் வந்து, மீண்டும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக டெல்லி சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு திரும்பியது தெரியவந்தது.

எனவே, கடத்தல் ஆசாமிகள் துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடும் சுங்க சோதனையினாலோ அல்லது கடத்தல் ஆசாமிகளுக்கு வேண்டியவர்கள் இல்லாததாலோ அவர்கள் தங்க கட்டிகளை வெளியில் கொண்டு வராமல் இருக்கை அடியில் மறைத்து விட்டு இறங்கியுள்ளனர். மீண்டும் அந்த விமானம் எங்கு செல்கிறது என்ற சரியான தகவல் கிடைக்காததால், கடத்தல் ஆசாமிகளால் அந்த தங்கத்தை உடனே எடுக்க முடியவில்லை. இதனால் மறைத்து வைத்த தங்கத்தை எப்படி வெளியில் கொண்டு வருவது என தெரியாமல் அப்படியே விட்டு சென்றுவிட்டனர் என தெரிந்தது.

கடத்தல் ஆசாமிகளில் ஒருவர், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால், அதிகாரிகள் சோதனை நடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து,  விமானத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, தங்க கட்டிகளை இருக்கைகளில் மறைத்து வைத்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம், மின்னணு பொருட்கள், ஐ போன் போன்ற செல்போன்கள், வெளிநாட்டு பணங்கள் கடத்துவது மிகப் பெரியளவில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ரூ60 கோடிக்கு மேல் கடத்தல் பொருட்கள் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் கடத்தல் அதிகரித்து வருவது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: