ஜாமீனில் வந்து தலைமறைவான பிரபல ரவுடி பினு கூட்டாளியுடன் கைது

சென்னை: போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான பிரபல ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளியை போலீசார் நேற்று கும்மிடிப்பூண்டி அருகே கைது செய்தனர். சென்னை, சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பினு. இவன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. போலீசாரிடம் சிக்காமல் இருக்க தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 50வது பிறந்தநாளை ரவுடி பினு, சென்னை அடுத்த மாங்காடு அருகே மலையம்பாக்கம் என்ற கிராமத்தில் ரவுடிகளுடன் கொண்டாடினார். கேக்கை அரிவாளால் வெட்டி  கொண்டாடியது பெரும் பரபரப்பையும், போலீசாரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அங்கு சென்ற போலீசார் ரவுடி கும்பலை சுற்றி வளைத்தனர். பிறகு ரவுடி பினுவையும் போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து  நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற ரவுடி பினு மீண்டும் தலைமறைவானான். தொடர்ந்து, போலீசார் ரவுடி பினுவை தேடி வந்தனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சி தானிப்பூண்டி கிராமத்திற்கு  ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரவுடி பினு பதுங்கி இருப்பதாக ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் குமரனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைந்தது.

அதன்பேரில் பாதிரிவேடு எஸ்.ஐ. சதாசிவம் உள்ளிட்ட 4 பேர் கொண்ட போலீஸ் குழு நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று அதிரடியாக பண்ணை வீட்டில் நுழைந்தனர். அப்போது போலீசாரை  பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து ரவுடி பினு மற்றும் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் (23) ஆகிய இருவரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.  பின்னர் அவர்களை பாதிரிவேடு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஜெயபிரகாஷ் மீது இரண்டு கொலை வழக்கு உள்ளது தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: