புதுடெல்லி: விமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 737 மேக்ஸ் போயிங் ரக விமானத்தை விரைவில் உள்ளூர் பயணிகள் சேவைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த விமானத்தில் சாட்காம் என்ற வசதி இணைக்கப்பட்டுள்ளது.இதனால் விமான பயணிகள் வை-பை, இணைய சேவையை விமானத்தில் பறக்கும் போதே பயன்படுத்தலாம். இது குறித்து ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய்சிங் கூறியதாவது: எங்கள் நிறுவனம் சார்பில் நவீன வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு கொண்ட 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. விமானத்தில் பயணிகள் விரும்பும் வகையில் சொகுசான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக விமானத்தில் வை-பையுடன் கூடிய பிராட்பேண்ட் இணையதள வசதியை தர இருக்கிறோம். இந்த விமான சேவை மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் தொடங்கும். . இவ்வாறு அவர் கூறினார்.