கோைவ: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் லாலி மணிகண்டன். இவரது அண்ணன் மாதவன் என்கிற மகாதேவன் (32), நண்பர்கள் தியாகராஜன் (25), அருண் (22) ஆகியோர் கடந்த 26.8.2015 இரவு கோவை சிந்தாமணிபுதூர் சிக்னல் அருகே துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 25 பேரை சூலூர் போலீசார் கைது செய்தனர். கூலிப்படை தலைவன் மோகன்ராம் மற்றும் அவனது கூட்டாளி காசிநாதன் (42) ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களில் பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கோவை அழைத்து வந்த சூலூர் போலீசார் நேற்று கோவை ஜே.எம்.எண் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி பிரபு சங்கர் வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சூலூர் போலீசார், கொலை நடந்த சிந்தாமணிபுதூர் சிக்னல் மற்றும் கொலை செய்ய கூலிப்படையினர் பின் தொடர்ந்த இடங்களை மோகன்ராமை அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது மோகன்ராம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: தஞ்சாவூர் திருவிடைமருதூரில் என் நண்பர் ஸ்டாலினின் தம்பி ராஜா வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் லாலி மணிகண்டன் கைதானார். இவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததும் நண்பருக்காக பழிக்கு பழி வாங்க கொலை செய்ய திட்டமிட்டோம். இதற்காக, சோமனூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தோம். ஜாமீன் கிடைத்து வெளியே வந்த லாலிமணிகண்டனுடன் 8 பேர் இரு காரில் சென்றார்கள். நாங்கள் 12 பேர் 2 காரில் பின் தொடர்ந்தோம். சிந்தாமணிபுதூர் சிக்னல் அருகே நின்ற காரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டோம். லாலிமணிகண்டனை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டோம். ஆனால் அவர் தப்பி விட்டார். காரில் வைத்து அவரது அண்ணன், நண்பர்கள் 2 பேரை கொலை செய்தோம். நான் மும்பையில் இருந்தபோது போலீசில் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு மோகன்ராம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி, போலீசார் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறோம். மோகன்ராம் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் மாநில அளவில் 40 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவரிடமிருந்து 29 செல்போன், ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது’’ என்றனர்.என்கவுன்டர் செய்ய உள்ளதாக தாய் வழக்குதிண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன்ராம் (40). இவரது தாய் முத்துலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘என் மகன் மோகன்ராம் மும்பையில் வேலைக்கு சென்றபோது அவனை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இதுவரை எங்கு வைத்திருக்கின்றனர் என்ற விபரம் தெரியவில்ைல. அவனை என்கவுன்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே, அவரை ஆஜர்படுத்த உத்தரவிடவேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் தரப்பில் ‘‘கோவை மாவட்டம், சூலூரில் நடந்த கொலை வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதற்காக மும்பையிலிருந்து அழைத்து வரப்படுகிறார்’’ என ெதரிவித்தனர். இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டு மனுவை முடித்து வைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி