திருப்பூரில் தாசில்தார் ஆபீசுக்கு வந்தவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து தந்த பியூட்டி பார்லர் பெண் கைது

* போலி ஆவணங்களால் பலர் ஜாமீனில் வந்தது அம்பலம்

* வக்கீல் உள்பட 4 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

திருப்பூர்: திருப்பூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்தவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து விற்ற வழக்கில் பியூட்டி பார்லர் பெண் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் மாசானவடிவு. இவர், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து, பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வந்துள்ளார். இவர் சிலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் தயார் செய்து கொடுப்பதாக அதிகாரிகளுக்கு வந்த தகவலையடுத்து அவரை திருப்பூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து, ஏராளமான போலி முத்திரைகளை கைப்பற்றினர். மேலும் மாசானவடிவு கொடுத்த தகவலின்பேரில், அவினாசி சாலை எஸ்.ஏ.பி. தியேட்டர் பின்புறம் உள்ள பாரதி நகரில் ‘பியூட்டி பார்லர்’ நடத்தி வரும் மகேஸ்வரியும் (32) கைது செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்து தமிழக அரசு கோபுர சீல், பேரூராட்சி செயல் அலுவலர், நில அளவை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் போலி முத்திரைசீல்கள் மற்றும் கோர்ட் ஜாமீன் மனு, பட்டா சான்றிதழ், வாரிசு சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்கள் கட்டுக்கட்டாக இருந்தது.

அவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள்.  இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக சேவூரை சேர்ந்த வக்கீல் சுதாகரனுக்கும் மேலும் சில புரோக்கர்களுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த மோசடி பற்றி, போலீசார் கூறும்போது, ``வக்கீல் சுதாகரன், தன்னிடம் ஜாமீன் கேட்டு வருபவர்களை மகேஸ்வரியின் பியூட்டி பார்லருக்கு சென்றால் சான்றிதழ் வாங்கி விடலாம் என பரிந்துரை செய்வார். அதன்படி, கோர்ட் ஜாமீன் வாங்க முயற்சிப்பவர்கள், மகேஸ்வரியிடம் போலிச் சான்றிதழ் பெற்று கோர்ட்டில் ஒப்படைத்து ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த போலி சான்றிதழ் மூலம் எத்தனை பேர் கோர்ட்டை ஏமாற்றி ஜாமீனில் வெளிவந்துள்ளனர் என்பது குறித்தும், முத்திரையை தயார் செய்து கொடுத்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.  இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள வக்கீல் சுதாகரன், புரோக்கர்கள் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: