நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி மறுப்பு காவல் நிலையம் முன்பு தர்ணா செய்த வைகோ கைது

சென்னை: நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை போலீசார் கைது செய்தனர். பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு குறித்து நக்கீரன் வார இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. இதையடுத்து நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபாலை போலீசார் நேற்று அதிரடியாக விமான நிலையத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள துணை கமிஷனர் செல்வ நாகரத்தினம் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், நக்கீரன் ஆசிரியர் கோபாலை பார்க்க அனுமதி கேட்டார். ஆனால் அவரை போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். உடனே அவர், ‘‘நான் அரசியல்வாதியாக வரவில்லை வக்கீலாக வந்திருக்கிறேன்’’ என்று கூறி அடையாள அட்டையை காண்பித்து உள்ளே செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, வைகோ காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக வைகோவை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

வைகோ கைதை கண்டித்து, மதிமுக தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், நக்கீரன் கோபாலை பார்க்க பத்திரிகையாளர்களும் அனுமதி கேட்டனர். அவர்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்ததால் பத்திரிகையாளர்களும் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிந்தாதிரிப்ேபட்டை காவல் நிலையம் முன்பு அதிரடிப்படை வீரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கைது ெசய்யப்பட்ட வைகோவை போலீசார் மாலை விடுவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: