தாமிரபரணியில் 11ம் தேதி மகா புஷ்கர விழா ஜடாயு தீர்த்தக்கட்டத்தில் மகாபரணி ஆரத்தி பூஜை: 54 யாக குண்டத்தில் நாளை தொடங்குகிறது

நெல்லை: தாமிரபரணி மகா புஷ்கர விழா 11ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு கவர்னர் பங்கேற்கும் ஜடாயு தீர்த்தக் கட்டத்தில் காசி கங்கை கரையில் நடப்பது போல் சிறப்பு மகா பரணி ஆரத்தி பூஜை நடக்கிறது. இதற்காக 54 யாக குண்டத்தில் நாளை முதல் பூஜைகள் நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரபரணி மஹாபுஷ்கர திருவிழா வருகிற 11ம் தேதி தொடங்குகிறது. காலையில் பாபநாசத்தில் நடக்கும் தொடக்க விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். தொடர்ந்து அன்று மாலை நெல்லை அடுத்துள்ள அருகன்குளம் தாமிரபரணி ஜடாயு தீர்த்த கட்டத்தில் ஆகம விதிகளின்படி புதியதாக கட்டப்பட்டுள்ள படித்துறையில் நடைபெறும் மஹா பரணி ஆரத்தி நிகழ்ச்சியிலும் கவர்னர் பங்கேற்று வழிபடுகிறார். இதற்காக இந்த தீர்த்தகட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நதிக்கரை அருகே சிறிய ஓய்வறையும் அமைக்கப்படுகிறது. 144 அடியில் படித்துறை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை இப்பகுதியில் கவர்னர் இருப்பார். 5.30 மணிக்கு எட்டெழுத்து பெருமாள் கோயில் கோசாலைக்கு சென்று வழிபடுகிறார்.  ஆரத்தி பூஜையின் போது காசியில் கங்கைக்கு நடப்பது போல் மகா பரணி ஆரத்தி பூஜை நடக்கிறது. இதற்காக காசியிலிருந்து 7  சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேதபண்டிதர்கள் காசியிலிருந்து வருகின்றனர். மேலும் படித்துறையில் 7 சிறப்பு அலங்கார வளைவுகளும் அமைக்கப்படுகின்றன. புஷ்கர விழாவை முன்னிட்டு எட்டெழுத்து பெருமாள் கோயில் கோசாலை முன்பகுதியில் உள்ள இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 54 யாககுண்டங்களும், மையத்தில் பத்ம குண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. கோசாலையில் இன்று சிறப்பு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகங்கள் நடக்கின்றன. இதனைத்தொடர்ந்து நாளை முதல் சிறப்பு யாககுண்டங்களில் யாகபூஜைகள் நடத்தப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: