ராமநாதபுரம் கண்மாயில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிக அளவில் மணல் எடுப்பதாக புகார்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இடைதாங்கி கண்மாயில் கரை அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிக ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மணல் அள்ளிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் சிக்கல் பகுதி ஆய்வாளர் முகமது நசீர் மணல் கொள்ளையர்களுடன் பணம் கேட்டு பேசுவதாக வெளியான ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இடைதாங்கி கண்மாயில் இரவு, பகலாக மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இடைதாங்கி, பாப்பாக்குடி உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், மேலும் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கும் இந்த இடைதாங்கி கண்மாய் பயன்பட்டு வருகின்றது. மேலும் அந்த மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக தமிழக அரசின் குடிநீர் திட்டத்தின் கீழ் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டு கரையை பலப்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன் படி கரையை பலப்படுத்த ஒப்பந்தம் எடுத்த நபர்கள், அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட 20 அடி ஆழத்திற்கு தோண்டி சவுடு மண்ணையும், அதற்கு கீழ் உள்ள மணலையும் எடுத்து விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 2 அடி ஆழம் மட்டுமே தோண்ட வேண்டிய இடங்களில் 20 அடி ஆழம் வரை தோண்டுவதால் நிலத்தடி நீரின் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வட்டாட்சியரிடம் கேட்ட போது இடைதாங்கி கண்மாயில் உரிய ஆய்வு செய்வதாக அவர் கூறியுள்ளார். இந்த புகார் நிரூபணமானால் பணிகள் நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: