லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் மேலும் அரை கிலோ தங்கம் சொத்து ஆவணங்கள்

கடலூர்: லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் கடலூர் வங்கி லாக்கரில் நடத்தப்பட்ட ஆய்வில் 500 கிராம் தங்கமும் பலகோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன. கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரை சேர்ந்தவர் பாபு (55). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியை சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் முத்துக்குமாரின் சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு வசித்து வந்த கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பாபுவின் 21 வங்கி கணக்குகளையும், 6 லாக்கர்களையும் வங்கி அதிகாரிகள் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கினர். இதேபோல் அவரது உதவியாளர் செந்தில்குமாரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில்  கடலூரில் 2 வங்கி கிளைகளில் 3 லாக்கர்களில் கடந்த 19ம் தேதி போலீசார் நடத்திய சோதனையில் 11 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை செம்மண்டலத்தில் உள்ள ஆந்திரா வங்கிக்கு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் காலை 11 மணிக்கு சென்றனர். அங்கு பாபு பெயரில் இருந்த ஒரு லாக்கர்கரையும் திறந்தனர். அவற்றில் 500 கிராம் தங்க நகைகளும், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் அடங்கிய 25 பத்திரங்களும் இருந்தது தெரியவந்தது. அவற்றை மதிப்பீடு செய்த போலீசார், மீண்டும் அவற்றை அதே லாக்கரில் வைத்து சீல் வைத்தனர். இரவு 7 மணிக்கு இச்சோதனை முடிவடைந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: