மணல் கடத்தலில் மாமூல் கேட்டு போனில் மிரட்டல் : விசாரணைக்கு டிமிக்கி தந்த இன்ஸ்பெக்டர்

சாயல்குடி: சாயல்குடி அருகே மணல் திருட்டு தொடர்பாக பேரம் பேசி வாட்ஸ்அப்பில் வைரல் ஆன இன்ஸ்பெக்டர், நேற்று டிஎஸ்பி முன்பு விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது நசீர். இவர் அப்பகுதியில் நடக்கும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததுடன், வாடிக்கையாக மணல் அள்ளுவோரிடம் பணம் கேட்டும், வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இவரது மிரட்டலுக்கு பயந்து பலரும் தொடர்ந்து மாமூல் கொடுத்து வந்ததுடன், தாராள மணல் கொள்ளையிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டருக்கும், மணல் கொள்ளை கும்பலுக்கு புரோக்கராக இருந்த சிக்கல் ஊராட்சி மன்ற தண்ணீர் திறப்பாளர் காளிதாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டரிடம் பேசியபோது பதிந்து வைத்திருந்த வாய்ஸ் ரெக்கார்டை காளிதாஸ், வாட்ஸ்அப்பில் வெளியிட்டார். மணல் கொள்ளைக்கு கமிஷன் கேட்டு உத்தரவு போடும் இன்ஸ்பெக்டரின் பரபரப்புப் பேச்சுகள், வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.இந்த ஆடியோவை கேட்ட ராமநாதபுரம் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு ராமநாதபுரம் டிஎஸ்பி நடராஜனுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் நேற்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு முகம்மது நசீரிடம் டிஎஸ்பி நடராஜன் தெரிவித்தார். மேலும் ராமநாதபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் நடராஜன் காத்திருந்தார். ஆனால் பகல் 12 மணி வரை இன்ஸ்பெக்டர் முகம்மது நசீர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுபற்றி டிஎஸ்பி நடராஜன் கூறுகையில், ‘‘முறைப்படி தகவல் தெரிவித்தும், குறித்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் வரவில்லை. அவர், ஆஜரான பிறகு விசாரணை நடத்தி எஸ்பியிடம் அறிக்கை  வழங்கப்படும். அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காளிதாஸ் உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக அழைத்த போது, அவர்கள் சொந்த வேலை காரணமாக ஆஜராவதில் தாமதம் ஏற்பட்டது. இன்னும் மூன்று நாட்களுக்குள் விசாரணையை முடித்து எஸ்பியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: