கடைமடைக்கு நீர் வராததால் கருகிய பயிரை கண்டு விவசாயி தற்கொலை

நாகை: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தலையாமலை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (49). விவசாயி. இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தை  குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தார். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்ததால் கூடுதலாக நிலம் குத்தகைக்கு பிடித்து, 6 ஏக்கர் நிலத்தில் சம்பா  சாகுபடி செய்தார். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் 35 நாள் வயதுடைய பயிராக உள்ளது. இந்தநிலையில், கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. விதை முளைத்ததில் இருந்து கடந்த 30 நாட்களாக தண்ணீர் இல்லை, மழையும் இல்லை. இதனால் பயிர்கள்  கருகியது. இதனை கண்டு ராமமூர்த்தி மனவேதனை அடைந்தார்.

குடும்பத்தினர் ஆறுதல் கூறியும் வாடும் பயிரைக்கண்டு வேதனைப்பட்டார். கடந்த 9ம் தேதி வயலுக்கு  சென்ற அவர் அங்கு பயிர்கள் கருகியதை கண்டு மனம் துடித்தார். பின்னர், வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டுதிருப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: