ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது: ஏராளமானோர் மனு கொடுத்ததாக பசுமை தீர்ப்பாய குழு தகவல்

தூத்துக்குடி: தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழுவினர் நேற்று 2வது நாளாக ஸ்டெர்லைட் ஆலையில் 2 மணி நேரம் ஆய்வு செய்தனர். தூத்துக்குடியில் கடந்த மே 22, 23ம் தேதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து மே 28ல் ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல்  வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல்  வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனரக  இன்ஜினியரும், விஞ்ஞானியுமான வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது. அந்த குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தனர். அவர்கள் தாமிரக்கழிவு சேர்ந்துள்ள மண்ணை ஆய்வு செய்தனர். பின்னர் நேற்று காலை 8.30 மணிக்கு  ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்றனர். அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி முரளிரம்பா, மாசு கட்டுப்பாட்டு வாரிய இன்ஜினியர்  லிவிங்ஸ்டன் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை  அதிகாரிகள் உடன் சென்றனர். 1 மணி 53 நிமிடங்களுக்கு ஆய்வு நடந்தது. 10.23 மணிக்கு குழுவினர் ஆலையில் இருந்து  வெளியே வந்தனர். பின்னர் அ.குமரெட்டியாபுரத்திற்கு வந்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். பொதுமக்கள், எங்கள் ஊரில் நிலத்தடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. 2 வயது குழந்தைக்கு கூட மூச்சுத்திணறல் நோய் உள்ளது. இந்த ஆலையை நிரந்தரமாக  மூட வேண்டும் என்றனர்.

 பின்னர் நீதிபதி குழுவினர் அங்கிருந்து புறப்பட முயன்றபோது 40க்கும் மேற்பட்டவர்கள் 3 வேன்களில் வந்தனர். அவர்கள், சுற்றுப்புற சூழலை சரியான முறையில்  பராமரித்து எங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை சில உண்மைக்கு புறம்பான செய்திகளால் மூடப்பட்டுள்ளது. எனவே மக்கள் நலனை கருதி  ஆலையை திறக்க ஆவண செய்யவேண்டும் எனக்கூறி நீதிபதியிடம் மனுவை கொடுத்தனர். அங்கிருந்தவர்கள், மனு கொடுக்க வந்தவர்களிடம் வாக்குவாதம்  செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். நீதிபதி தருண்  குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு தாமிரா-1  பகுதிக்கு சென்று, தொழிற்சாலை ஊழியர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் கருத்துக்களை  கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றனர். தொடர்ந்து 2 மணி நேரம்  பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

பின்னர் நீதிபதி தருண் அகர்வால் அளித்த பேட்டி: தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்தோம். எங்களுடன் மத்திய மற்றும் மாநில  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இருந்தனர். ஆலையை  சுற்றி உள்ள கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளோம். ஆலையின் தொழிலாளர்கள், ஊழியர்களை சந்தித்து  அவர்கள் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளோம்.

இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆலை வேண்டாம் என்றே வந்துள்ளன. இன்று (24ம்தேதி) வழக்கு  தொடர்பாக வாதி, பிரதிவாதிகள் தரப்பினர்களிடம் இருந்தும் மனுக்கள் பெறுகிறோம். ஆலையிலும் அபாயகரமான பொருட்கள் எதுவும் இருப்பதாக  தெரியவில்லை. விரைவில் முழு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மோதல்: தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் அமைக்கப்பட்டிருந்த அரங்கிற்குள், நீதிபதி தருண் குழுவினர் வந்ததும், அங்கு  திரண்டிருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் மனுக்களை அளிக்கச் சென்றனர். இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வந்த பலரை போலீசார்  வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று வெளியேற்றினர். போலீசாரின் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் ஆதரவாக மனு அளிக்க  வந்தவர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு போலீசாரின் முன்னிலையிலேயே  மோதிக்கொண்டனர். அதனை போலீசார்  தடுக்காமல் படம் பிடித்த பத்திரிகையாளர்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக மனு அளித்து திரும்பியவர்கள் சிலர்,  எதிர்ப்பாளர்களுக்கு மத்தியில் சிக்கி கொண்டனர். அவர்களை எதிர்ப்பாளர்கள், தாக்கி வெளியே தள்ளினர். இதில், ஆலையின் சார்பில் வந்திருந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 வக்கீல்கள் தாக்கப்பட்டனர். தொடர்ந்து மனு அளிக்க வந்த சில கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசி போலீசார் அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: