கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற ஆர்டிஓவை கொல்ல முயற்சி: பூசாரி உள்பட 50 மீது வழக்குப்பதிவு...சேத்தியாத்தோப்பில் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் உள்ள குமார உடைப்பு வாய்க்காலை கருப்பசாமி கோயில் பூசாரி ஆறுமுகம் என்பவர் ஆக்கிரமித்து 2 மாடியில் கட்டிடம் கட்டியிருந்தார். இதனால் குமார உடைப்பு வாய்க்கால் மேற்கு பகுதி கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இக்கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்த நேற்று காலை சிதம்பரம் ஆர்டிஓ ராஜேந்திரன், புவனகிரி தாசில்தார் ேஹமா ஆனந்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் குமார உடைப்பு வாய்க்காலுக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த அவர்களில் சிலர் தங்கள் மீது மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு, அருகில் இருந்த ஆர்டிஓ ராஜேந்திரனை நோக்கி ஓடினர். அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆர்டிஓ ராஜேந்திரனை அவர்களிடமிருந்து பத்திரமாக மீட்டு சென்றனர். இதுதொடர்பாக ஆர்டிஓ ராஜேந்திரன் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கருப்புசாமி கோயில் பூசாரி ஆறுமுகம் உள்பட 50 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்தனர்.

இந்நிலையில் ஆர்டிஓவை கொலை செய்ய முயன்ற தகவல் கலெக்டர் அன்புச்செல்வனுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர் நேரடியாக சேத்தியாத்தோப்புக்கு சென்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிரடியாக அகற்றவும், மேலும் இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மாலை மீண்டும் அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு கட்டிடத்தை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஆர்டிஓவை கொலை செய்ய முயன்ற சம்பவம் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றும் நடவடிக்கையால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: