ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-ஹாங்காங் இன்று மோதல்.... நாளை பாகிஸ்தானுடன் விறுவிறு சவால்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் சவாலாக இன்று கத்துக்குட்டி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. பரம எதிரி பாகிஸ்தானை நாளை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஹாங்காங் அணிகள் மோத உள்ளன. விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

சமீபகாலமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பலமின்றி காணப்படுகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மிடில் ஆல்டரை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதே போல,  ‘தல’ டோனியின் பேட்டிங் செயல்பாடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. உலக கோப்பைக்கு முன்பாக இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

மேலும் டோனியை எந்த இடத்தில் களமிறங்குவது என்பதிலும் அணி நிர்வாகம் குழப்பத்திலேயே உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தொடராக ஆசிய கோப்பை அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியிலிருந்தே பரிசோதனை முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி, ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், தவான், மணிஷ் பாண்டே, டோனி, கேதார் ஜாதவ், அம்பாதி ராயுடு, ஹர்திக் பாண்டியா என பலமான பேட்டிங் வரிசை கொண்டுள்ளது.காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பும்ராவுடன் இணைந்து மீண்டும் பந்துவீச்சை தொடங்க உள்ளார். குல்தீப், சாஹல் சுழல்  கூட்டணி பக்கபலமாக உள்ளது. எனவே அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ஹாங்காங் அணியால் போட்டியின் முடிவை மாற்றி அமைக்க முடியும். அந்த அணி நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்துள்ளது. ஹாங்காங்கால் 116 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியிலிருந்து அடுத்த நாளே ஹாங்காங் மீண்டு வருமா என்பது சந்தேகமே.

இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டமே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். இவ்விரு அணிகளும் மோத உள்ள விறுவிறுப்பான சவால் நாளை நடக்க உள்ள நிலையில், இன்றைய போட்டி இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாகவே கருதப்படுகிறது. நல்ல பார்மில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய அணி தனது சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணிகள் விபரம்

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகார் தவான், கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், சர்துல் தாகூர், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது.

ஹாங்காங்: அன்சுமன் ராத் (கேப்டன்), அய்ஷாஷ் கான், பாபர் ஹயாத், கேமரூன் மெக்அல்சன், கிறிஸ்டோபர் கார்டர், இஷன் கான், இஷன் நவாஸ், அர்ஷத் முகமது, கின்சித் ஷா, நதீம் அகமது, ராக் கபூர், ஸ்காட் மெக்கேனி, தன்விர் அகமது, தன்விர் அப்சல், வகாஸ் கான், அப்தாப் ஹூசேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: