கும்பகோணம்: ஜிஎஸ்டி வரியால் கும்பகோணத்தில் பித்தளை பாத்திர தயாரிப்பு 70 சதவீதம் சரிந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில பித்தளை பாத்திரம் பொருட்கள் தயாரிக்கும் 180க்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. இவற்றில் குடம், தவலை, தட்டு, படி, மரக்கா, சொம்பு, குவளை, கற்பூர ஆரத்தி தட்டு மற்றும் பல்வேறு பாத்திரங்கள் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், சுவாமிமலை, மாங்குடி, வலையப்பேட்டை, நாச்சியார்கோயில், திருநாகேஸ்வரம் பகுதிகளில் பல குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக பித்தளை பாத்திரங்களை குடிசை தொழிலாக உற்பத்தி செய்து வருகின்றனர். கும்பகோணம் பித்தளை பாத்திரத்திற்கு வெளிமாநிலங்களுக்கு என்று தனிமவுசு உள்ளது. கும்பகோணத்தில் தயாரிக்கப்படும் பித்தளை பாத்திரங்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனைக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது.
