சிவகாசி : சிவகாசியில் இருந்து சிப்பிப்பாறை வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக சங்கரன்கோவில், ஆலங்குளம், திருவேங்கடம் உள்ளிட பல ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு சாத்தூர் வழியாக மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவில்பட்டியில் இருந்து சிப்பிப்பாறை, நடுவப்பட்டி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் வழியாக ராஜபாளையம் வரை மட்டும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் எப்போதும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், வெம்பக்கோட்டை, ஆலங்குளம், சிப்பிப்பாறை, நடுவப்பட்டி போன்ற ஊர்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பணிபரிந்து வருகின்றனர். இவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் பஸ் வசதியில்லாததால் சாத்தூர், சிவகாசிக்கு வந்து வெம்பக்கோட்டைக்கு சுற்றி செல்கின்றனர். இதனால், நேரம் விரயமாவதுடன் அதிகச் செலவில் கொடுத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிவகாசியில் இருந்து காலை, மாலை நேரங்களில் வெம்பக்கோட்டை, நடுவப்பட்டி, சிப்பிப்பாறை இளையசந்தல் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்கினால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பெரிதும் பயனடைவர். இந்த வழித்தடத்தில் அரசு பஸ்களே இயக்கப்படவில்லை.
தனியார் பஸ் விருப்பமான நேரத்திற்கு வந்து செல்கிறது. இதனால், பஸ்சுக்காக பல மணிநேரம் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். எனவே சிவகாசி, வெம்பக்கோட்டை, நடுவப்பட்டி, சிப்பிபாறை, இளையசந்தல் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி