பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

திருவனந்தபுரம்: பம்பையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பம்பா அணையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பை, பெரியாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள் வழக்கமாக பம்பையில் இறங்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரிவேணி பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் கடந்த 5 நாட்களாக இந்த பாலத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் யாரும் இந்த பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் நேற்று பம்பை ஆற்றில் வெள்ளம் மீண்டும் அதிகரித்தது. இதனால் பம்பை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள கடைகள் மற்றும் மண்டபத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கான திரிவேணி பாலத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது. இதனால் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே சபரிமலைக்கு செல்ல பத்தனம்  திட்டா மாவட்ட நிர்வாகமும் தடை விதித்துள்ளது. பக்தர்களை எருமேலி, பத்தனம்  திட்டாவில் தடுத்து நிறுத்த போலீசுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நிறைபுத்தரிசி பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு  கோயில் நடை திறக்கப்படுகிறது. நாளை நிறைபுத்தரிசி பூஜைகள் நடைபெறும்.  நாளை  இரவு கோயில் நடை சாத்தப்படும். நிறைபுத்தரிசி பூஜையின்போது ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: