சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் நேற்றிரவு 6.30 மணி அளவில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் பரவியதால், மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூச்சுக் குழாய் (டிரக்கியாஸ்டமி) மாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பியவருக்கு கடந்த 25ம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 27ம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு கருணாநிதிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைய தொடங்கியது. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டது. நள்ளிரவு 1.25 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது. கருணாநிதியை காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பிறகு அவரது ரத்த அழுத்தம் சீரடைந்தது. தொடர்ந்து, அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த 29ம் தேதி இரவு 7.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து கருணாநிதி தொடர்பான அறிக்கை ஒன்று வெளிவர போவதாக தகவல் வெளியானது. இதனால், கருணாநிதியின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர். இரவு 9.50 மணிக்கு காவிரி மருத்துவமனை அறிக்கை ெவளியிட்டது. அதில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேள்விபட்டு தொண்டர்கள் மேலும் மருத்துவமனையை சுற்றி குவியத் தொடங்கினர். அவர்கள் 3 நாட்கள் மருத்துவமனை முன்பு திரண்டு இருந்தனர். 3 நாட்களுக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை சீரானது. இதைத் தொடர்ந்து தொண்டர்கள் அங்கிருந்து சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் என்று மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வந்தனர். அதில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்படும் அறைக்கே சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். இதை கேள்விபட்டு ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் குவியத் தொடங்கினர். அவர்கள், ‘‘எழுந்து வா தலைவா எழுந்து வா, கழகத்தை காக்க எழுந்து வா.. என்று விண்ணை அதிர வைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இதனால், மருத்துவமனை முன்பு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று இரவு 6.30 மணியளவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது வயது மூப்பின் அடிப்படையில் கணக்கிடும் போது முக்கிய உறுப்புகளை பராமரிப்பதில் சவாலான நிலை தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பொறுத்தே கணிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து டாக்டர்கள் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்ற தகவல் வெளியானதும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொருவரும் சோகமயமாக காட்சியளிக்க தொடங்கினர். தொடர்ந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. மருத்துவமனை முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் திரண்டு வந்த வண்ணம் இருந்ததால், தொடர்ந்து இரவு முழுவதும் பரபரப்பு நிலவியது. விடிய விடிய தொண்டர்கள் கலைந்து செல்லாமல், கருணாநிதி வீடு திரும்பும் வரை செல்ல மாட்டோம் என்று கூறி காத்திருந்த காட்சியை காண முடிந்தது.கருணாநிதி உடல்நலம் விசாரிப்பு: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் செயலாளர் விஜய் சாய்ரெட்டி நேற்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தார். ‘‘மருத்துவர்கள் அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்தனர். விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று வேண்டுகிறேன்’’ என தெரிவித்தார் அவருடன் கட்சியின் செயலாளர் சுப்பாராவ் உடனிருந்தார். தேமுதிக மாநில இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் கூறுகையில், ‘‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பாக கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தோம். அவர் உடல் நலம் சீராகி விரைவில் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’’ என்றார்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நலம் விசாரிப்புமத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று இரவு 8.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவர், திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலார் முத்தரசன், தி.க.தலைவர் வீரமணி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். நள்ளிரவையும் தாண்டி அவர்கள் மருத்துவமனையிலேயே இருந்தனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!