அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உழைக்கும் கூட்டணி அதிமுக கூட்டணி : தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்!!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணரெட்டி, தளி தொகுதி பாஜக வேட்பாளர் நாகேஷ் குமார் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக கூட்டணியானது மக்கள் உயர வேண்டும். உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. ஓசூரை பொறுத்தவரை தமிழகத்தின் முக்கிய நகரமாக திகழ்கிறது. ஓசூர் என்று சொன்னால் எல்லா ஊர் மக்களுக்கும் தெரியும். இந்த தொழில்நகரம் மேலும் சிறக்க அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தொழில் முனைவோர் மாநாடு நடத்தினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 4 நிறுவனங்கள், ரூ.5 ஆயிரம் கோடி தொழில் முதலீடு செய்தது. அப்போது 13ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.2019ல் நான், தொழில் முனைவோர் மாநாடு நடத்தி, 304 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டேன். அப்போது ரூ.600 கோடி முதலீடுகள் வந்தது. இதேபோல் ஓசூரில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ₹6700 கோடியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ஓசூரில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அதிமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை என்பது தவறான கருத்து. இதுபோன்ற தொழில் வளர்ச்சியால் ஓசூரில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.ஓசூர் தொழில் நகரம் என்பதால் போக்குவரத்து பிரச்னை பிரதானமாக உள்ளது. இதற்கு தீர்வு காண ₹220 கோடியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஓசூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கொடியாளம் அணையில் இருந்து 50 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோல் ₹20 கோடியில் சர்வதேச மலர் ஏலமையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தர்மபுரி விவசாயிகள் காய்கறிகளை பெங்களூருக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இது பெரும் சிரமமாக உள்ளது. எனவே இங்கேயே காய்கறிகளை உரிய விலைக்கு விற்கும் வகையில் 20 ஏக்கரில் பிரமாண்ட காய்கறி சந்தை அமைக்கப்படும். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஓசூர் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அரிய திட்டங்கள் தொடரவும், புதிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்….

The post அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உழைக்கும் கூட்டணி அதிமுக கூட்டணி : தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: