ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லாங்கர் தேர்வு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகிய 3 வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. பயிற்சியாளர் லீமேன் தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடருடன் பதவி விலகினார். அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மும்முரமாக ஈடுபட்டது. இந்நிலையில், புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் சதர்லாண்ட் நேற்று அறிவித்தார். முன்னாள் துவக்க பேட்ஸ்மேனான லாங்கர் சுமார் 20 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியவர். 105 டெஸ்டில் 7,500க்கும் அதிகமான ரன் மற்றும் 23 சதம் அடித்துள்ளார்.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மாநில அணிக்கும், பெர்த் ஸ்கார்சர்ஸ் டி20 அணிக்கும் பயிற்சியாளராக திறம்பட செயல்பட்டு வருகிறார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு லாங்கர்பயிற்சியாளராக நீடிப்பார். அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2 ஆஷஸ் தொடர், உலக கோப்பை, உலக டி20 தொடர்களில் விளையாட உள்ளது. வரும் 22ம் தேதி அவர் முறைப்படி பதவி ஏற்கிறார்.

‘மரியாதையை மீட்போம்’:

47 வயதாகும் லாங்கர் அளித்த பேட்டியில், ‘‘நாம் எப்படி விளையாடுகிறோம் என்பது மட்டுமல்ல நல்ல குடிமகனாகவும் இருக்க வேண்டுமென்பதே முக்கியமென கருதுகிறேன். இந்த பணி சவாலானது என்றாலும், நமது அணியில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். எனவே வெற்றிகளோடு இழந்த மரியாதையையும் மீட்போம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Related Stories: