மகளிர் டி.20 உலக கோப்பை; வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?: நியூசிலாந்துடன் துபாயில் இன்று மோதல்

துபாய்: ஐசிசி சார்பில் 2 ஆண்டுக்கு ஒருமுறை மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9வது டி.20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை தலா 5 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொருஅணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி துபாய் மைதானத்தில் நடக்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜெமீமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பர்.

அண்மை காலமாக கேப்டன் கவுர் பார்மில் இல்லாதது கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. பவுலிங்கில் ரேணுகா சிங், பூஜா வஸ்தரகர், ஸ்ரேயங்கா பாடீல் எதிரணிக்கு நெருக்கடி அளிக்கலாம்.மறுபுறம் ஷோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளது. இருப்பினும் அண்மைகாலமாக டி.20 தொடரில் பெரிய வெற்றிகளை பெறவில்லை. தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ள இந்தியாவும், 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தும் மோதுவதால் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியா வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பி பிரிவில் தென்ஆப்ரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

 

The post மகளிர் டி.20 உலக கோப்பை; வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?: நியூசிலாந்துடன் துபாயில் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: