அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியதால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணி அளவில் நடைமேடை எண் 2ல் போளூர் மாவட்டம் செல்லும் பேருந்தில் 5 பேர் குடிபோதையில் தூங்கிகொண்டு இருந்துள்ளனர். திடீரென அவர்கள் எழுந்து பார்த்தபோது பேருந்து செல்லாமல் நின்றுகொண்டு இருந்ததால் அவர்கள், டிரைவரிடம் சென்று பேருந்தை எடுக்கும்படி கேட்டுள்ளனர். இதன்காரணமாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென டிரைவர் எழுந்துவந்து போதையில் இருந்தவர்களை கீழே இறங்கி செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த 5 பேரும் அரசு பஸ்சின் கண்டக்டர், டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதுபற்றிய தகவல் பரவியதும் அனைத்து பஸ் டிரைவர்களும் கண்டக்டர்களும் வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகள், சென்னை புறநகர் செல்லும் அனைத்து பேருந்துக்கள் அனைத்தையும் ஆங்காங்கே நிறுத்திவிட்டு நடுரோட்டில் அமர்ந்து மறியல் நடத்தினர். 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் சிவஆனந்த் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ‘’அரசு ஊழியரை தாக்கியவர்களை கைது செய்து வழக்குபதிவு செய்யப்படும். எனவே, போராட்டத்தை கைவிட வேண்டும்’ என்று ஆய்வாளர் சிவஆனந்த் கேட்டுக்கொண்டார். ‘’ டிரைவர், கண்டக்டரை தாக்கியவர்களை கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்’ என்று அரசு ஊழியர்கள் ஆவேசமாக கூறியதுடன் தொடர்ந்து 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அரசு ஊழியர்களை தாக்கிய 5 பேரை அம்பத்தூர் பகுதியில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுபற்றி அறிந்ததும் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.இதுகுறித்து டிரைவர் ராமன்(50), கண்டக்டர் அருணாச்சலம்(42) ஆகியோர் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில், ‘ தாக்குதல் நடத்திய நபர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மணி(21), செல்வம்(21), ஜாக்கி(21), செல்வா(21) பிரகாஷ்(25) என்று தெரிந்தது. இவர்கள் அம்பத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து சரக்கு வேன் ஓட்டிவருவதாக கூறினர். ‘’டிரைவரிடம் பேருந்து எடுக்கும்படி கேட்டபோது அவர் எங்களை தாக்கினார். இதனால் பதிலுக்கு நாங்கள் அவர்களை தாக்கினோம்’ என்றனர். …
The post கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அடி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.