கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 31 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

ஊட்டி :  கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தொடர் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறைகள் மற்றும் பள்ளி தேர்வு விடுமுறைகளின் போது சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். நீலகிரியில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்கள் விடுமுறை காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டின. இந்த விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த 24ம் தேதி முதலே ஊட்டியில் குவிந்தனர். விடுமுறை தினமான நேற்றும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெயில் கொளுத்திய நிலையில் படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினார். இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று 15 ஆயிரம் பேரும், விடுமுறை தினமான நேற்று சுமார் 16 ஆயிரம் பேர் என 2 நாட்களில் மட்டும் 31 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். இதேபோல், நகருக்கு வெளியே உள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா, கொடநாடு காட்சி முனை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது….

The post கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 31 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை appeared first on Dinakaran.

Related Stories: