சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 ரிசார்ட்டுகளை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்டுகள் காரணமாக மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தரவேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆஜராகி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியில் உள்ள 53 ரிசார்ட்டுகள் மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 11 ரிசார்ட்டுகள் உரிய அனுமதி பெற்று செயல்படுகின்றன. 42 ரிசார்ட்டுகள் எந்தவித அனுமதியும் இல்லாமல் செயல்படுவது தெரியவந்ததால் மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி. சொக்கலிங்கம் இன்னும் பல ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அது குறித்த விவரங்களை மனுவாக தாக்கல் செய்துள்ளோம் என்றார். அப்போது, வனத்துறை வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த புதிய அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதிய அறிக்கை தாக்கல் செய்ய மூன்று வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
அப்போது, ரிசார்ட் உரிமையாளர்கள் தார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சீல் வைக்கப்பட்ட ரிசார்ட்டுகள் தொடர்பான மேல்முறையீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழக்கை சுட்டிக்காட்டி விசாரிக்க மறுப்பதாக குறிப்பிட்டனர். இதைக்கேட்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிக்கலாம் என்றும் அதற்கு இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும் தெரிவித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
