சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்தியா தான் மக்களாட்சியின் இந்தியாவாக இருக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும், மனிதநேயமும், மதச்சார்பற்ற  தன்மையும் கொண்ட இந்தியா தான் மக்களாட்சியின் இந்தியாவாக இருக்க முடியும். இவை அரசியல் தத்துவங்கள் மட்டுமல்ல ஆட்சியின் தத்துவமாக மாற வேண்டும். இந்த அடித்தளம் கொண்டதாகத் தான் திராவிட மாடல் ஆட்சியானது இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்ேபசினார். நேற்று சென்னை, குருநானக் கல்லூரியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கலாநிதி வீராசாமி, வழக்கறிஞர் வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எச். ஜவாஹிருல்லா, இனிகோ இருதயராஜ், ஹசன் மௌலானா, பிரபாகர் ராஜா, அரவிந்த் ரமேஷ், துணை மேயர்  மகேஷ் குமார், முன்னாள் ஒன்றிய அமைச்சர்  ஈவிகேஎஸ். இளங்கோவன், கவிப்பேரரசு வைரமுத்து, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர்  கார்த்திக்,  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஹாஜாகனி, நெடுஞ்செழியன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவர் மஸ்தான், ஆணையத்தின் உறுப்பினர் செயலர்  ரவிச்சந்திரன், கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  மாநில சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் ‘தலைநிமிரும் தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டியானது நடத்தப்பட்டு – அதில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. திமுக ஆட்சி அமைத்ததுமே தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது. இதனைக் கண்கூடாக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ‘தலைநிமிரும் தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டி நடத்தி இருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்துக்கு இது மிக முக்கியமானது ஆகும். இந்தப் போட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு இருக்கக்கூடிய வகையிலே இந்தப்போட்டி நடந்திருக்கிறது. மாவட்ட அளவில் 228 பரிசுகளும், மாநில அளவில் 6 பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான பரிசுகள் 20 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம் எனவும், மாநில அளவிலான பரிசுகள் 1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் எனவும் வழங்கப்பட்டு இருக்கிறது. ரத்தம் சூடான, இளமை முறுக்கேறிய, உணர்ச்சி கொப்பளித்த, எழுச்சி பீறிடும் காலக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இது போன்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்களாகத் தான் இருப்பார்கள். திராவிட இயக்கம், தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம்  ஆகிய கொள்கைக் கோட்பாடுகளின் மீது பற்றுக் கொண்டு அது தொடர்பாக அதிகம் படிக்கும் மாணவர்கள் தான் இது போன்ற போட்டிகளில் அதிகம் கலந்து கொள்வார்கள். அவர்கள் தான் பெரும்பாலும் பரிசையும் பெற்று இருக்கிறார்கள். இன்னும் சொன்னால் பிற்காலத்தில் அரசியல் இயக்கங்களில் இருந்து பொறுப்புகளுக்கு வந்து பணியாற்றக் கூடியவர்களாக அந்த மாணவர் தலைவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள். இதனை நான் சொல்வதற்குக் காரணம், மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைப்பதற்காக அல்ல, இந்த பேச்சாற்றலை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை குறிப்பிட்டு சொல்கிறேன்.பேச்சு என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்க்காது. எல்லாவற்றிலும் வென்றவர்கள் கூட மேடைகளில் தோற்று விடுவார்கள். மேடைகளை ஆட்சி செய்வது என்பதும், கோட்டையை ஆட்சி செய்வதைப் போல அவ்வளவு கடினமானது. பேசும் கலை வளர்ப்போம் என்று தலைவர் கலைஞர்  ஒரு புத்தகம் எழுதினார்கள். நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’  என்று இனமானப் பேராசிரியர் ஒரு புத்தகம் எழுதினார்கள். இந்த இரண்டு நூல்களையும் நம்முடைய மாணவச் செல்வங்கள் படிக்க வேண்டும்.கலைஞர் பேச்சு புயல் என்றால், பேராசிரியர் பேச்சு அமைதி, கலைஞர் பேச்சு மழை என்றால், பேராசிரியர் பேச்சு வெள்ளம்,கலைஞர் பேச்சு சூரியன் என்றால், பேராசிரியர் பேச்சு நிலா, கலைஞர் பேச்சு இடிமுழக்கம் என்றால், பேராசிரியர் பேச்சு எதிரொலி. தமிழ்நாட்டு மேடைகளை எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் தான் இவர்கள் இருவரும். இந்த போட்டிக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகள் அனைத்தும் மிக மிக உன்னதமான தலைப்புகள். ஒன்றே குலம் ஒருவனே தேவன், மனிதநேயம் ஓங்கட்டும், மதவெறி நீங்கட்டும், மக்களாட்சியின் மாண்பும் மதச்சார்பற்ற அரசும், ஏன் வேண்டும் இடஒதுக்கீடு, பன்மைத்துவமே இந்தியத்துவம், உழைப்பில்லாத செல்வமும் – மனிதம் இல்லாத அறிவியலும் – என்பது போன்ற தலைப்புகள் பேச்சுப்போட்டித் தலைப்புகள் மட்டுமல்ல, இந்தியாவுக்கான தலைப்புகள் ஆகும். இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கத் தேவையான தலைப்புகள் ஆகும்.சமூகநீதியும் – சமத்துவமும் – சகோதரத்துவமும் – மனிதநேயமும் – மதச்சார்பற்ற தன்மையும் கொண்ட இந்தியா தான் மக்களாட்சியின் இந்தியாவாக இருக்க முடியும். இவை அரசியல் தத்துவங்கள் மட்டுமல்ல – ஆட்சியின் தத்துவமாக மாற வேண்டும். இந்த அடித்தளம் கொண்டதாகத் தான் திராவிட மாடல் ஆட்சியானது இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும், திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது, சீர் செய்யும், திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது, அனைவரையும் ஒன்று சேர்க்கும், திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது, அனைவரையும் சமமாக நடத்தும், திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது, தோளோடு தோள் நின்று அரவணைக்கும் அத்தகைய அடிப்படையில் தான் இந்த திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு நடைபெற்று வருகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். …

The post சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்தியா தான் மக்களாட்சியின் இந்தியாவாக இருக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: