அப்பரடிகள் சுட்டும் அட்டபுட்பம்

நன்றி குங்குமம் ஆன்மிகம் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்பத்துப்பாட்டு எனும் சங்க காலத் தமிழ் நூல்கள் வரிசையில், ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தற் பொருட்டு கபிலரால் பாடப்பெற்றதாகும். இருநூற்று அறுபத்தொரு அடிகளையுடைய இப்பாடலில் தலைவி தோழியுடன் நீராடிப் பல பூக்களைப் பறித்துப் பாறையிற் குவித்தானென்ற செய்தியைக் கூறுகையில், தொண்ணூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அறுபத்து மூவரில் ஒருவரான முருகநாயனார் புராணம் கூறும் சேக்கிழார்பெருமான், சோழநாட்டுத் திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவரான முருகனார் நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்பெறும் நால்வகைப் பூக்களில் சிவபூசைக்கு உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனி இடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட மலர்த் தொகுப்புக்களைத் தொடுத்து, திருப்புகலூர் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலிலுள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்து, திருவைந்தெழுத்தோதி வழிபடும் நெறியை சிவப்பணியாக மேற்கொண்டு வாழ்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். புகலூர் வர்த்தமானீச்சரத்து ஈசனைப் போற்றிப் பரவிய திருஞானசம்பந்தர், அங்கு பாடிய பதிகத்தின் மூன்றாம் பாடலாக,தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும்கொண்டு கொண்டு அடிபரவிக் குறிப்பு அறிமுருகன் செய்கோலம்கண்டு கண்டு கண்குளிரக் களிபரந்து ஔிமல்கு கள்ஆர்வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச் சரத்தாரே – என்றும், ஐந்தாம் பாடலில்,மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய்முடிமேல்வாசமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே –  என்றும் பாடி, வாச மாமலர் கொண்டு முருகநாயனார், ஈசனைப் பூசிக்கும் உயர்ந்த நெறி பற்றி எடுத்துரைத்துள்ளார். மூவர் தேவாரப் பாடல்கள் பலவற்றில் பூக்களாலும், அவற்றால் தொடுத்த மாலை களாலும் பூசனை செய்யும் பாங்கு பற்றி தெளிவுற எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. திருநாவுக்கரசு பெருமானார் திருவதிகை வீரட்டானத்தில் பதிகம் பாடும்போது,சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்எனக் குறிப்பிட்டு நீர், பூ, நறுமணப் புகை ஆகியவை கொண்டு இறைவனைப் பூசித்தல் வழிபாட்டுக் கடமை என்பதை உணர்த்தியுள்ளார். திருஞானசம்பந்தரின் பதிகங் களில் சிவபெருமானுக்குரிய கொன்றைப் பூவில் தொடங்கி பலவகையான பூக்கள் பற்றி ஆங்காங்கு குறிப்பிடப்பெற்றுள்ளன. திருநனிபள்ளியில்,புறவிரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னைபுனை கொன்றை துன்று பொதுளிநறவிரி போது தாது புதுவாசம் நாறும்நனிபள்ளி போலும் நமர்காள் – என்றும், திருமாந்துறையில்,கோங்கு செண்பகம் குந்தொடு பாதரி குரவிடைமலர் உந்திஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவாளைப்பாங்கினால் இடுந்தூபமும் தீபமும் பாட்டு அவிமலர் சேர்த்தித்தாங்குவார் அவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே – என்றும்,

நறவம் மல்லிகை முல்லை மௌவலும் நாண் மலர் அவை வாரி
இரவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை

– என்றும் குறிப்பிட்டு மலர்களாலும், காவிரி நீராலும், தூபம் தீபம் ஆகியவற்றாலும் வழிபடப் பெறுகின்ற மாந்துறையின் சிறப்பினை எடுத்துரைத்துள்ளார்.திருப்பழமன்னிப் படிக்கரையில் பதிகம் பாடிய சுந்தரர்,திரிவன மும்மதிலும் எரித்தான் இமையோர் பெருமான்அரியவன் அட்டபுட்பம் அவைகொண்டு அடிபோற்றி நல்லகரியவன் நான்முகனும் அடியும் முடியும் காண்பு அரியபரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே – என்று பரவி அட்டபுட்பம் எனப் பெறும் எட்டு வகை மலர் கொண்டு பூசிக்கும் நெறிதனைக் குறிப்பிட்டுள்ளார். திருவாட்போக்கியில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்த அப்பர்பெருமான், ஒரு பாடலாக,கட்டு அறுத்து கடிது எழு தூதுவர்பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமேஅட்டமாமலர் சூடும் வாட்போக்கியார்க்கு

இட்டமாகி இணையடி ஏத்துமே

 – என்று பாடிப் பரவி வாட்போக்கி இறைவன் அட்ட மாமலர் எனப்பெறும் எட்டு வகை மலர்களைச் சூடிக்கொண்டு திகழ்கின்றான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சோற்றுத் துறையினில்,

கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டாஎட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானைசுட்ட மாமலர்கள் கொண்டே ஆன்அஞ்சும் ஆட்ட ஆடிச்சிட்டராய் அருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துணையனாரே – என்றும், திருமறைக்காட்டினில்,அட்ட மாமலர் சூடி அடும்பொடுவட்ட புன்சடை மாமறைக் காடரோ – என்றும் கூறி, சிவபெருமான் அட்ட மாமலர்களை விரும்பிச் சூடுபவன் எனக் காட்டியுள்ளார்.அட்டபுட்பங்களாக1. புன்னை2. வெள்ளெருக்கு3. சண்பகம்4. நந்தியாவட்டம்5. குவளை6. பாதரி7. அலரி (ஆற்றுப்பாலை)8. செந்தாமரை

எனும் எண்மலர்களையும் குறிப்பர். இம்மலர்களின் மகத்துவம் உணர்ந்த திருநாவுக்கரசர், அப்பூதியடிகளின் மகன் பெரிய திருநாவுக்கரசுவிடம் தீண்டி இறந்தபோது அவன் சவத்தினை திங்களூர் கோயில்முன் வீதியில் கிடத்தி, “ஒன்றுகொலாம்” எனத் தொடங்கும் பதிகத்தினைப் பாடி உயிர் பெற்றெழச் செய்தார். விடந்தீர்த்த அப்பதிகத்தின் எட்டாம் பாடலாக,

எட்டு கொலாம் அழர் ஈறு இல்பெருங்குணம்எட்டு கொலாம் அவர் சூடும் இனமலர்எட்டுகொலாம் அவர் தோள் இணையாவனஎட்டுகொலாம் திசை ஆக்கினதாமே – என்று பாடி எண்மலர் தம் சிறப்பினை உலகவர் அறியச் செய்தார்.திருவதிகைப் பெருமானைப் போற்றி திருநாவுக்கரசர் பாடிய ஒரு பதிகம் முழுவதிலும் (10 பாடல்களிலும்) அவர் பட்டியலிடும் அட்டபுஷ்பங்களை இறைவனுக்குச் சூட்டி வழிபடுவதால், கொடுவினைகள் அனைத்தும் தீரும் எனக் கூறியுள்ளார். நாமும் அட்டபுட்பங்களால் பூசனை செய்து கயிலைநாதனின் அருள் பெற்று உய்வோம்….

The post அப்பரடிகள் சுட்டும் அட்டபுட்பம் appeared first on Dinakaran.

Related Stories: