தியாக தீபம்!

இன்று இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் ஆகும். காந்தியடிகள், குஜராத் மாநிலம் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்தவர். இங்கிலாந்து நாட்டின் சட்டக் கல்லூரியில் பயின்று, இந்திய தேசத்தின் பம்பாய் பட்டணத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர்.இந்திய தேசத்து மக்களின் ஏழ்மை நிலையைக் கண்ட காந்தியடிகள், ஏழைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக கதர் ஆடையை அணிவதை தனது வழக்கமாக மாற்றிக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற அறப்போராட்டங்கள் வழியாக இந்திய விடுதலைக்கான குரலை எழுப்பினார். காந்தியடிகளின் தியாகத்தாலும், அவரது போராட்டங்களாலும் இந்திய தேசம் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி விடுதலை பெற்றது.எனினும், காந்தியடிகள் அவர்கள், 1948ம் ஆண்டு, அதாவது இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் நாள், புது டில்லியில் நாதுராம் கோட்சே என்பவரால், துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவரும், பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கியவருமாகிய காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது அறவழிப் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.காந்தியடிகளின் தியாகமான வாழ்வை இந்தியர்களாகிய நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதற்காகத்தான், அவர் பிறந்த நாளாகிய அக்டோபர் மாதம் இரண்டாம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி என்னும் பெயரில் சிறப்புத் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.இந்திய மக்களின் விடுதலைக்காக காந்தியடிகள் தன்னையே தியாக தீபமாக கரையக் கொடுத்தது போல, உலக மக்கள் அனைவரும் விடுதலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன்னையே பலியாகக் கொடுத்தார். இயேசு கிறிஸ்து ஏன் பலியானார்.மனுக்குலமாகிய நமக்கு அவர் கொடுத்த விடுதலை என்ன? தொடர்ந்து சிந்திப்போம்.அன்பார்ந்தோரே! மனுக்குலமாகிய நாம் சில காலம் பூமியில் வாழ்ந்து, பின்பு மரணிக்க வேண்டும் என்பதற்காக, கடவுள் நம்மைப் படைக்கவில்லை. மாறாக, நித்திய நித்திய காலமாக அவரோடு வாழ வேண்டும் என்பதற்காகவே, மனிதர்களாகிய நம்மை கடவுள் தமது சாயலிலே படைத்தார் என்று திருமறை கூறுகிறது. எனினும், நமது ஆதிப் பெற்றோராகிய ஆதாமும், ஏவாளும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாத காரணத்தினால் நாம் அனைவரும் பாவிகளானோம்.ஆயினும், அன்பே உருவான கடவுள், பாவத்திலிருந்து நம்மை மீட்கவும், பரலோக வாழ்வைக் கொடுக்கவும், ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பாக இயேசு என்ற பெயரில் இப்பூவுலகில் மனிதனாகப் பிறந்தார். மனிதர்களாகிய நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். அநேகருடைய வாழ்வில் அற்புதங்கள் செய்து அவர்களை மகிழ்வித்தார். அவர்மீது பொறாமை கொண்டவர்கள் சிலுவை மரணத்துக்கு அவரை ஒப்புக்கொடுத்தனர். அதன் வழியாக கடவுள் தனது மீட்பின் திட்டத்தை நிறைவேற்றினார். ஆம்! மனுக்குலத்தின் மீட்புக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து வேதனை நிறைந்த சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. (ஏசாயா 53:5) என்று திருமறை கூறுகின்ற வண்ணம், ஆண்டவர் இயேசு நமக்காக வாரினால் அடிக்கப்பட்டார்; முள்முடி சூட்டப்பட்டார்; கொல்கொதா என்னும் மலையில், சிலுவை மரத்தின் மீது, கைகளும், கால்களும் ஆணிகளால் அடிக்கப்பட்டு, தனது உதிரம் முழுவதையும் சிந்தி, சிலுவையில் தனது ஜீவனையே ஈந்தார். இவ்விதம் நமக்கு பாவ மன்னிப்பாகிய விடுதலையைக் கொடுத்தார். அவரது பிறப்பைத்தான் நாம் கிறிஸ்து ஜெயந்தி என்று கொண்டாடி மகிழ்கிறோம்.அன்புக்குரியவர்களே! காந்தியடிகளின் தியாகத்தை நினைவு கூருகின்ற இதே நாளிலே, தியாக தீபமாகிய கிறிஸ்துவின் அன்பையும் நினைவுகூருவோம். அவரே தெய்வம் என்று அறிந்து கொள்வோம். அவரை மீட்பராக மனதில் ஏற்றுக்கொள்வோம். அவரையே தெய்வமாக வழிபடுவோம். அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.Rt.Rev.Dr.S.E.C.தேவசகாயம்பேராயர், தூத்துக்குடி- நாசரேத்திருமண்டலம்…

The post தியாக தீபம்! appeared first on Dinakaran.

Related Stories: