29 விமர்சனம்

 

வாழ்க்கையில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாத 29 வயது சத்யா (விது), கிடைத்த வேலைகளை செய்து, தனக்கான அடையாளம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அவருக்கு திடீரென்று அறிமுகமாகிறார், 21 வயது விஜி என்கிற விஜயலட்சுமி (பிரீத்தி அஸ்ரானி). பிறகு அவர்கள் தங்கள் வயது இடைவெளியை மறந்து காதலிக்கின்றனர். விஜிக்கு வாழ்க்கையை பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் அவர், ஐஏஎஸ் தேர்வு எழுத செல்கிறார். முன்னதாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யாவை விட்டு பிரிகிறார். விஜி மட்டுமே தனது வாழ்க்கை என்றிருந்த சத்யா, அவரால் கிடைத்த மாற்றத்தை ஏற்றாரா? கடைசியில் அவர்கள் இணைந்தார்களா என்பது மீதி கதை.

வழக்கமான காதல் கதைகளில் இருந்து விலகியிருக்கும் வேறொரு பாணி காதல் கதை இது. எழுதி இயக்கியுள்ள எம்.ரத்னகுமார், காட்சிகளை அழகியலுடன் சொல்லி, வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் அது ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. ‘நெக்ஸ்ட் டோர் கேர்ள்’ இமேஜை மீண்டும் தக்கவைத்துள்ள பிரீத்தி அஸ்ரானி, நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கும், விதுவுக்குமான நெருக்கமான காதல் காட்சிகள், ஜென்-ஸீ ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ். கேரக்டரை உணர்ந்து நடித்துள்ள விது, காதல் பிரிவின் வலியை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.

திடீர் வில்லனாக மாறும் மாஸ்டர் மகேந்திரன், ஏதாவது செய்வார் என்று பார்த்தால், இறுதியில் அமைதியாகி விடுகிறார். தவிர அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார், ஆதிரா பாண்டிலட்சுமி உள்பட அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர்.மாதேஷ் மாணிக்கத்தின் இயல்பான ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் அழுத்தமான பின்னணி இசையும், ஆழமான கருத்துள்ள பாடல்களும் கூடுதல் பலம். பொதுவான காதலை புதிய கோணத்தில் சொல்ல முயன்ற இயக்குனர் எம்.ரத்னகுமார், கதையை 10 அத்தியாயங்களாக பிரித்து சொல்லி, ஆடியன்ஸின் கவனத்தை ஆழமாக பதியச் செய்திருக்கிறார். படத்தின் நீளத்தை யோசிக்காமல் குறைத்திருக்கலாம்.

Related Stories: