மும்பை: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், சிம்ரன், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், பாலிவுட் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:இந்தி திரையுலகை சேர்ந்தவர்கள், தென்னிந்திய நடிகர், நடிகைகளின் உழைப்பையோ அல்லது அவர்கள் பல வருடங்களாக காப்பாற்றி வரும் நற்பெயரையோ கண்டுகொள்வது கிடையாது. என் வாழ்க்கையில் 50 சதவீதத்துக்கு மேல் திரையுலகிற்காக மட்டுமே செலவிட்டுள்ளேன். அப்படி இருந்தும் எனக்கான மரியாதை கிடைக்காதது அதிக வேதனையை தருகிறது.
பாலிவுட் தயாரிப்பாளர்கள் தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கான அடிப்படை வசதிகளில் கூட பேரம் பேசுகின்றனர். தங்கும் வசதி, விமான டிக்கெட், உதவியாளர்கள் எண்ணிக்கையில் கஞ்சத்தனம் காட்டுகின்றனர். இத்தனை உதவியாளர்களை அழைத்து வரக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அதனால்தான் எனக்கு பாலிவுட்டில் பணியாற்ற பிடிக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் என்னை தேடி வந்த பல இந்தி பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன்.
