உலகம் முழுவதும் இருக்கும் திரையுலகில், மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது, அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் ஆஸ்கர் விருது. தற்போது ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் திரைத்துறையில் அதிகரித்து வரும் நிலையில். ஆஸ்கர் அமைப்பு விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நடிப்பு மற்றும் எழுத்து பிரிவுகளில் மனிதர்களின் நேரடி பங்களிப்பு மட்டுமே அங்கீகரிக்கப்படும். மனிதர்களால் நடிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு மட்டுமே நடிப்பு பிரிவில் விருதுகளுக்கு பரிசீலிக்கப்படும்.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கதாபாத்திரங்களோ அல்லது திரைக்கதைகளோ விருதுகளுக்கு தகுதி பெறாது. இதுவரை ஒரு நடிகர் ஒரு குறிப்பிட்ட பிரிவில், ஒருமுறை மட்டுமே பரிந்துரைக்கப்பட முடியும் என்ற விதி இருந்தது. இனிமேல், ஒரு நடிகர் ஒரு ஆண்டில் இரு வேறு படங்களில் சிறப்பாக நடித்திருந்தால், அவரை ஒரே பிரிவில் 2 இடங்களுக்கு பரிந்துரைக்கலாம். சர்வதேச திரைப்பட பிரிவிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் ஒரு படத்தை மட்டுமே அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்க முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால், உலகின் மிகவும் முக்கியமான கான், பெர்லின், வெனிஸ் உள்பட 6 சர்வதேச திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை வெல்லும் படங்கள், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ பரிந்துரை இல்லாமலேயே ஆஸ்கருக்கு நேரடியாக தகுதி பெறும். அடுத்த ஆண்டு மார்ச் 14ல் நடக்கும் 99வது ஆஸ்கர் விழாவில் இருந்து இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.
