சென்னை, ஏப்.28: 2011-ம் ஆண்டு வெளியான ‘180’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் நித்யா மேனன். ‘வெப்பம்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’, ‘இருமுகன்’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘இட்லி கடை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் பேசிய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், “உங்களுக்குக் குழந்தைகள் வேண்டும் என்பதற்காக மட்டும் நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கென பல அறிவியல் முறைகள் உள்ளன. பலர் ஏற்கெனவே இந்த வழியில் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். எனக்குச் சுதந்திரம் மிகவும் முக்கியம். திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அதுவே வாழ்க்கை அல்ல. எனக்கு உண்மையான காதல் கிடைத்தால், நான் நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் எனக்குத் திருமணம் ஆகவில்லை என்பதற்காக வாழ்க்கை நின்றுவிடுவதில்லை” என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
