திரைக்கு வந்த ‘எஃப்ஐஆர்’, ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய மனு ஆனந்த், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ’என்னை அறிந்தால்’ என்ற படத்தில் அஜித் குமாருடன் பணியாற்றிய அவர் கூறுகையில், ‘எனது தந்தையும், தம்பியும் இறந்துவிட்டனர். அவர்கள் பெயரில் ஒரு அமைப்பு நடத்தி உதவிகள் செய்து வந்தோம். ஒருநாள் அஜித் குமார் என்னை கேரவனுக்கு வரவழைத்தார். 5 லட்ச ரூபாய்க்கு ஒரு செக் எழுதி கொடுத்தார். `உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்திருக்கிறது என்று எனக்கு தெரியும். நீங்கள் ஏதோ ஒரு நல்ல காரியம் செய்து வருவதும் தெரியும். அதற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றார்.
நான் எவ்வளவோ மறுத்தும் கூட அந்த பணத்தை எனக்கு அளித்தார். இதுபற்றி உடனே கவுதம் வாசுதேவ் மேனனிடம் சொன்னேன். `இது உனக்கும், அவருக்குமான விஷயம்’ என்றார். அதற்கு பிறகுதான் அந்த பணத்தை வாங்கினேன். தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு 5 லட்ச ரூபாய் பணம் அனுப்பிய அஜித் குமாரிடம், ஒருநாள் நானாக சென்று, ’என்னால் இனிமேல் இந்த அமைப்பை தொடர முடியாது. நீங்கள் பணம் அனுப்ப வேண்டாம்’ என்று சொன்னேன். நடிகனாக முயற்சி செய்த ஒரு இளைஞனுக்கு கையில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அவனை அழைத்து, சிகிச்சைக்கு தேவையான பணத்தை அஜித் குமாரே முழுமையாக கொடுத்தார்’ என்றார்.
