பாரிஸ்: சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம், ஏடிபி தரவரிசையில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ், 5ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 4ம் இடத்தில் இருந்த ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் தற்போது 5ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் டென்னிசில் தங்கப்பதக்கம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வரெவ், தொடர்ந்து சின்சினாட்டி ஓபனிலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றிகளின் மூலம் அவர் ஏடிபி தரவரிசையில் 5ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த மே 2019ல் ஸ்வரெவ், ஏற்கனவே 4ம் இடத்தில் இருந்தார். ஸ்பெயினின் முன்னணி நட்சத்திரம் ரஃபேல் நடால் காயம் காரணமாக சின்சினாட்டி ஓபனில் ஆடவில்லை. அடுத்து நடைபெற உள்ள யு.எஸ். ஓபன் போட்டிகளிலும் அவர் ஆடவில்லை. யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் பெடரரும், காயம் காரணமாக இந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் இருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இதனால் யு.எஸ்.ஓபனில் சிறப்பாக ஆடினால், தரவரிசையில் ஸ்வரெவ் மேலும் உயர்வார் என்று டென்னிஸ் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏடிபி தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் (11,113 புள்ளிகள்), ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் (9,980 புள்ளிகள்) மற்றும் கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாஸ் (8,350 புள்ளிகள்) உள்ளனர். ஸ்வரெவ் தற்போது 8,240 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளார். நடால் 7,815 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளார். யு.எஸ்.ஓபன் நடப்பு சாம்பியன் டொமினிக் தீம் (6,995 புள்ளிகள்) 6ம் இடத்திலும், ரஷ்யாவின் இளம் வீரர் ஆண்ட்ரே ரப்லெவ் (6,400 புள்ளிகள்) 7ம் இடத்திலும், இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினி (5,533 புள்ளிகள்) 8ம் இடத்திலும் உள்ளனர். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (4,125 புள்ளிகள்) 9ம் இடத்திலும், கனடாவின் இளம் வீரர் டெனிஸ் ஷபலோவ் (3,580 புள்ளிகள்) 10ம் இடத்திலும் உள்ளனர்….
The post ஏடிபி தரவரிசை 4ம் இடத்திற்கு முன்னேறினார் ஸ்வரெவ்: 5ம் இடத்திற்கு இறங்கினார் நடால் appeared first on Dinakaran.