×

யூத்: விமர்சனம்

சென்னையில் சிறிய பேக்கரி வைத்துஇருக்கும் சூரஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினியின் மகன் கென் கருணாஸ், படிப்பில் கவனம் செலுத்தாமல், பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு ஆசைப்படுகிறார். அவரை எந்த பெண்ணும் காதலிக்க மறுக்கின்றனர். அப்போது மாணவி மீனாட்சி தினேஷை கென் கருணாஸ் காதலிக்கிறார். திடீரென்று மீனாட்சி தினேஷ் ஊருக்கு செல்ல, அந்த இடைவெளியில் இன்னொரு மாணவி பிரியான்ஷி யாதவ்வை காதலிக்கிறார். இதையறிந்த மீனாட்சி தினேஷ், கென் கருணாஸை பிரேக்அப் செய்து பிரிகிறார்.

ஆனால், பிரியான்ஷி யாதவின் காதலும் பொய்யானது என்றறிந்து துடிக்கும் கென் கருணாஸ், பிறகு அனிஷ்மா அனில் குமாரிடம் தனது காதலை சொல்கிறார். ஆனால், அவரது காதல் நிராகரிக்கப் படும் நிலையில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை. கென் கருணாஸ் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். ஒவ்வொரு பெண்ணிடமும் காதல் ரசம் ததும்ப பேசுவதும், நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடிப்பதும், அம்மா தேவதர்ஷினியின் உடல்நிலை பாதித்ததும் துடிப்பதும், அப்பா சூரஜ் வெஞ்சரமூடு அலட்சியப்படுத்துவதை நினைத்து வருந்துவதுமாக, தரமான நடிப்பை வழங்கியுள்ளார். சூரஜ் வெஞ்சரமூடு தண்ணிடியத்துவிட்டு கலாய்ப்பதும், உடனே தேவதர்ஷினி சிணுங்குவதும் சுவாரஸ்யம். தனது மகனின் படிப்பு பாதிக்கக்கூடாது என்று நளினியின் காலில் விழுந்து கதறியழும்போது, தேவதர்ஷினி உருக வைக்கிறார்.

மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், அனிஷ்மா அனில்குமார் மற்றும் கென் கருணாஸின் நண்பர்கள் உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கதைக்கு பொருத்தமான பாடல்களை வழங்கி ஹிட்டாக்கியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், பின்னணி இசையில் கூடுதல் பலத்தை சேர்த்து இருக்கிறார். விக்கியின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. ‘எதையும் எதிர்பார்த்து வருவது காதல் அல்ல’ என்ற கருத்தை சொல்லும் இயக்குனர் கென் கருணாஸ், உருவகேலி மற்றும் பெண் குரலை கிண்டல் செய்யும் காட்சிகளை கண்டிப்பாக தவிர்த்து இருக்கலாம். எனினும், இளைய தலைமுறையை இப்படம் கவரும்.

Tags : Ken Karunas ,Suraj Venjaramoodu ,Devadarshini ,Chennai ,Meenakshi Dinesh ,Priyanshi Yadav ,
× RELATED சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி