மீரா கதிரவன் எழுதி இயக்கிய ‘ஹபீபி’ என்ற படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றுள்ளார். தமிழ் இஸ்லாமியர்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை இப்படம் உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை கொண்ட இப்படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ ஆகும். ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகிய படங்களில் சமூக அக்கறையுடன் கருத்து சொன்ன மீரா கதிரவன், ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்துடன் வருகிறார்.
புதுமுகங்களுடன் முக்கிய கேரக்டரில் கஸ்தூரிராஜா நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையில் யுகபாரதி எழுதிய ’வல்லோனே’ என்ற பாடலில், மறைந்த பாடகர் நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் குரலை ஏஐ மூலம் மாற்றி இடம்பெறச் செய்துள்ளனர். மீரா கதிரவன் கூறுகையில், ’இதுவரை நான் நெருக்கமாக பார்த்த உலகின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். தவறான புரிதல்கள் கொண்ட இக்காலத்தில், மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பில் பதிவு செய்துள்ளேன்’ என்றார்.
