ராதிகா நடிப்பில் நாளை மறுதினம் திரைக்கு வரும் ‘தாய் கிழவி’ என்ற படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், ‘இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். படத்தை பார்த்த கமல்ஹாசன் சார், இதில் நிறைய நடிகர், நடிகைகளை உருவாக்கி இருக்கிறீர்கள் என்று சொன்னார். ’தாய் கிழவி’ கேரக்டரில் நடிக்க ராதிகா மேடத்தை தவிர வேறு யாரும் கிடையாது என்பதை படம் பார்த்த பிறகு சொல்வார்கள். ’சேயோன்’ படத்தில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடித்து வரும் நான், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டி வரவேண்டும் என்ற எண்ணத்திலோ படம் தயாரிக்கவில்லை.
நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் ஒரு பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன்’ என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சரத்குமார் பேசும்போது, ‘என் மனைவி கலையரசி ராதிகா, ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் வரும் 27ம் தேதி ரிலீசாகிறது. என் மனைவி வெற்றிபெற்றால் நான் வெற்றிபெற்ற மாதிரி. தாய் கிழவி என்றால், அனைவரையும் அரவணைத்து கட்டிக் காப்பவள் என்று அர்த்தம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன்மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்களை நெருங்கும் ராதிகாவுக்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான், இப்படத்தில் அவர் தைரியமாக நடித்துள்ளார்’ என்றார்.
