சென்னை: சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். வரும் 27ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது: நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு சினிமாவுக்கு வந்திருக்கிறேன்.
நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு நானும் திரும்பக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும், வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்காக என்னை விட்டுவிடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு.
இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் அதற்கு தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன். அப்படி தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி இயக்குனர்) மாதிரியான நான்கு நபர்களை இந்த துறைக்கு தேடிக்கொண்டு வருவேன். நடிகர்கள் சரத்குமார், சூரி, தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
