சென்னை: தென்னிந்திய படவுலகில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. நடிகை என்பதை தாண்டி, பொதுநிகழ்ச்சியில் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அதிரடியாக பதில் சொல்லி, அதன்மூலம் பிரபலமாகி வருகிறார். ‘ஆஸி’ என்ற இந்தி படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற டாப்ஸியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? மோடியா, ராகுல் காந்தியா’ என்ற கேள்விக்கு பதிலளித்த டாப்ஸி, ‘நான் இந்த நாட்டில் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
எனவே, என்னுடைய பதில் மோடிதான்’ என்று பரபரப்பாக பதிலளித்தார். இதற்கு முன்பு பாஜவினரை ட்ரோல் செய்வது என்றால், டாப்ஸிக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். கொரோனா லாக்டவுனில் பிரதமர் மோடி, அனைவரையும் வீட்டு விளக்குகளை அணைத்துவிட்டு, வெளியே வந்து விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி, கைகளை தட்டுங்கள் என்று சொல்லியிருந்தார். அப்போது டாப்ஸி தனது எக்ஸ் தளத்தில், ‘யோ… யோ… நம் அனைவருக்கும் புதிய வேலை வந்துவிட்டது. யோ… யோ…’ என்று கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இது அப்போது பலரது கவனத்தை ஈர்த்து, மோடியை அட்டாக் செய்வது போல் இருப்பதாக சொல்லப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

