
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இமான் இசையில் ‘உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலை விஜய்யுடன் இணைந்து பாடி அசத்தினார். தற்போது ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ்பெற்றுள்ளார்.
தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வரும் அவர், படப்பிடிப்புகளுக்கும் மற்றும் வெளியிடங்களுக்கும் பவுன்சர்கள் பாதுகாப்புடன் பந்தா செய்து வருவதாக கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்து கவலைப்படாத பிரியங்கா சோப்ரா கூறுகையில், ‘அன்புடன் என்னை அணுகும் ரசிகர்கள் மற்றும் எனது அனுமதியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை.
எனது அனுமதியின்றி போட்டோ எடுப்பதில் விருப்பம் இல்லை. இதற்கு முன்பு ஒருநாள் எனது மகளுடன் ஒரு பூங்காவில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் அந்த போட்ேடா சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுபோன்ற செயலால் எனது தனிப்பட்ட பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. அதனால்தான் சில பவுன்சர்களை நியமித்து, எனது பாதுகாப்புக்காக கூடவே அழைத்து வருகிறேன்’ என்றார். அவர் சொல்வது நியாயம்தான் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

