
தெலுங்கு குணச்சித்திர நடிகைகளில் ஒருவர், சுரேகா வாணி. டிவி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அவர், டி.வி தொடர் இயக்குனர் சுரேஷ் தேஜாவை காதல் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு கணவர் இயக்கிய டி.வி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிய சுரேகா வாணி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். ‘தெய்வத்திருமகள்’, ‘உத்தமபுத்திரன்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ உள்பட சில தமிழ்ப் படங்களில் அவர் நடித்துள்ளார்.
கடந்த 2019ல் கணவர் சுரேஷ் தேஜா இறந்த பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர், தற்போது சுப்ரிதா நடிப்பதை அங்கீகரித்துள்ளார். சுப்ரிதா நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான படம், ‘அமராவதிகி ஆஹாவனம்’. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது தாயார் சுரேகா வாணிக்கு மறுமணம் செய்து வைக்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த சுப்ரிதா, ‘எனது தாயாரிடம், இந்த வருடமே உங்களுக்கு திருமணம் செய்துவிடலாம் என்று சொன்னேன்.
ஏனோ அவருக்கு எனது தந்தைக்கு பிறகு வேறு யாரும் வேண்டாம், அந்த இடத்தை வேறு யாருக்கும் தரக்கூடாது என்று நினைக்கிறார். அந்த உணர்வை நானும் மதிக்கிறேன். எனினும், எனது திருமணம் நடப்பதற்கு முன்பு, எனது தாயாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதுகுறித்து உறவினர்களிடம் பேசிவிட்டேன். அவர்களுக்கும் இதில் சம்மதம்தான். எனது தாயை மிகவும் அன்புடன் கவனித்துக்கொள்ள வேண்டும். அவரது விருப்பங்களை மதிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவர்தான் அவருக்கு சரியாக இருப்பார். இந்த விஷயத்தில் எனது தாயின் விருப்பமும், மகிழ்ச்சியும்தான் மிகவும் முக்கியம்’ என்றார்.

