சென்னை: சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து புகார் கூறியுள்ளார் நடிகை லட்சுமி மன்ச்சு. தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்ச்சு. இவர் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஒரு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வடபழனியிலுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அவர் வந்திருந்தார். அங்கு தனக்கு அடுத்தடுத்து கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் லட்சுமி மன்ச்சு புகார் கூறியிருக்கிறார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘‘எனது அறைக்கு வந்தது முதல் டக் டக்கென ஒரே சத்தமாக இருந்தது. அந்த சத்தம் நின்றபாடில்லை. கேட்டால், கட்டுமான பணிகள் மேலே உள்ள தளத்தில் நடப்பதாக சொன்னார்கள். இந்த ஓட்டலுக்கு இதற்கு முன்பும் வந்துள்ளேன். ஆனால் இந்த முறை ஓட்டல் நிர்வாகிகள் செயல் மற்றும் அவர்களது பதில் தரும் முறை சரியாக இல்லை. போட்டோ ஷூட் நடத்த எனது அறைக்கு மேக்அப் பெண் கலைஞர் வந்தபோது, அவரை தடுத்து நிறுத்திவிட்டார்கள். போட்டோகிராபரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதற்கெல்லாம் இங்கு அனுமதி கிடையாது என மேனேஜர் சொல்கிறார். சில நாட்களுக்கு முன் இதே ஓட்டலில் போட்டோ ஷூட் நடந்திருக்கிறது. இப்போது எப்படி இதுபோல் சொல்லலாம் என கேட்டால், அந்த மேனேஜர் ரூடாக பேசினார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது’’ என பதிவிட்டுள்ளார்.
