சென்னை: ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பூக்கி’. இதில், அஜய் திஷன் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக தனுஷா நடிக்கிறார். பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி கதையாக உருவாகியுள்ள இப்படத்தை, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். பிப்.13-ல் வெளியாகும் இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது, ‘‘இப்படத்தின் இயக்குநர் கணேஷ் சந்திராவை முதலில் கேமராமேனாக அறிமுகப்படுத்தினேன் என்பதில் பெருமை.
இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. இந்தப் படம் ரொமான்டிக் காமெடி கலந்த கதை. கண்டிப்பாக ரசிக்கும்படியாக இருக்கும்’’ என்றார். இயக்குனர் கணேஷ் சந்திரா கூறும்போது, ‘‘கேமராவுக்கு பின்னால் இருந்து ‘ஆக் ஷன் கட்’ கேட்டுக் கொண்டிருந்த நான், முதல் முறையாக கேமராவுக்கு முன்னால் இயக்குநராக வந்திருக்கிறேன். இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்’’ என்றார்.
