ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ என்ற படத்துக்கு பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்டுள்ள அஜித் குமார், தனது அஜித் குமார் ரேஸிங் அணியினருடன் சென்று, பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்நிலையில், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிப்பதாக சொன்ன அஜித் குமார், தனக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் ஆகியோரை தனது கார் பந்தயம் நடக்கும் இடத்துக்கு வரவழைத்து, அவர்களுடன் சந்தோஷமாக பேசி செல்ஃபி எடுத்து, அந்த போட்டோக்களையும், வீடியோக்களையும் உடனுக்குடன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். யார், யார் தன்னை சந்திக்க வேண்டும் என்பதை அஜித் குமாரே முடிவு செய்கிறார்.
அவர்கள் மட்டுமே கார் பந்தயம் நடக்கும் இடத்துக்கு செல்ல முடியும். அப்போது அஜித் குமார் அணிந்துள்ளதை போல் அவர்களும் டிசர்ட், உடையணிந்து போஸ் கொடுக்கின்றனர். அவர்கள் அளிக்கும் பேட்டிகள், அஜித் குமாரின் ஆவணப்படத்தில் இடம்பெறுகிறது. இதுவரையில் சிம்பு, ஜி.வி.பிரகாஷ் குமார், யுவன் சங்கர் ராஜா, அனிருத், சிபிராஜ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, லீலா, ஆதிக் ரவிச்சந்திரன், திரிஷா ஆகியோர் அஜித் குமாரை சந்தித்து பேசியிருக்கின்றனர். இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், ‘சிறுத்தை’ சிவா ஆகியோர் ஆவணப்படத்தை உருவாக்குகின்றனர். கார் பந்தயம் முடிந்து அஜித் குமார் மீண்டும் நடிக்க வந்ததும் ஆவணப்படம் வெளியிடப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
