சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், ஸ்ருதிஹாசன். கடந்த 2018 முதல் 2020 வரை அவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். அப்போது நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலுக்கும், அவருக்குமான காதல் முறிந்திருந்தது. இந்த சிறிய இடைவெளி குறித்தும், காதல் முறிவு குறித்தும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அது வருமாறு:
அப்போது ஏற்பட்ட இடைவெளியில், எனக்குள் இருந்த சிறப்பான விஷயங்கள் வெளியே வந்தது. அவரை பிரிந்தது சோகமாக இருந்தது. மற்றவை அனைத்தும் உண்மையில் சிறப்பாக அமைந்தது. நான் யார் என்பதை தெரிந்துகொண்ட அற்புதமான நேரம் இது. எனக்கு இருந்த மனநிலை பிரச்னைகளையும் சரிப்படுத்த உதவியது. ஆனால், நான் கடுமையான பதற்றம் காரணமாக பெரிதும் அவதிப்பட்டதால், அன்றாட நடவடிக்கையில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
எதை தேடுகிறேன், நான் யார் என்பதில் எனக்கு தெளிவில்லாமல் இருந்தது. அதனால், லண்டனில் இருந்தபடியே இசையின் மூலமாக என்னை நான் மீண்டும் கண்டறிந்தேன். தினந்தோறும் எனது ஆடைகளை நானே துவைப்பது, எனக்கான உணவை நானே சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணிப்பது, திரும்பி வந்து புதிதாக எழுத பயிற்சி செய்வது, பிறகு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த இசையை சோதித்து பார்ப்பது என்று, எனது வாழ்க்கையை மிகவும் வித்தியாசமாக அமைத்திருந்தேன். அதை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.
