கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜ தலைவர் குரல் கொடுப்பதா? கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜ தலைவர் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோத போக்கு என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன். இந்நிலையில், தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படுகிற கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜ தலைவர் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்காகும். கர்நாடகம் வழங்குகிற காவிரி நீர் தமிழகத்தில் வீணடிக்கப்படுவதாக முருகன் கூறுகிறார். தமிழகத்தில் காவிரி நீர் வீணடிக்கப்படுவது திமுக ஆட்சிக்கு வந்த 60 நாட்களில் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் ஜூன் 12ம் தேதி காவிரி நீர் திறந்து சமீபத்தில் தான் கடைமடையை அடைந்திருக்கிறது. பாஜ தலைவர் கூறுகிற குற்றச்சாட்டு அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சிக்கு பொருந்துமே தவிர, 60 நாள் கூட நிறைவு பெறாத திமுக ஆட்சிக்கு பொருந்தாது. இத்தகைய குற்றச்சாட்டை தமிழக பாஜ தலைவர் கூறுவது தான் மிகவும் விந்தையாக, வியப்பாக இருக்கிறது. இதைவிட பச்சை துரோகத்தை தமிழகத்திற்கு பாஜ செய்துவிட முடியாது. காவிரி படுகை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாகக் கருத்துக்களைக் கூறியிருக்கிற தமிழக பாஜ தலைவர் எல்.முருகனை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு விரோதமாகக் கூறப்பட்ட கருத்துக்களை அவர் திரும்பப் பெறவில்லை எனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்….

The post கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜ தலைவர் குரல் கொடுப்பதா? கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: